
கோவையில் செம்மொழி மாநாடு ஏற்பாடு முதல்வர் கருணாநிதி 2வது நாளாக ஆய்வு ‘பணிகள் முழு திருப்தி’
சென்னை :
முதல்வர் நேற்று மாலை 4.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதிக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், முதல்வர் கருணாநிதி, நிருபர்களிடம் கூறுகையில், ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கோவை சென்றிருந்தேன். பணிகள் மிக சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கின்றன. மாநாட்டு ஆயத்தப் பணிகள் முழு மனதிருப்தி அளித்துள்ளது. ஆனாலும், மாநாடு சிறப்படைய வேண்டும் என்பதற்காக, மேலும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவிட்டு வந்துள்ளேன்’ என்றார்.
முதல்வர் கருணாநிதி வந்த விமானம் பிற்பகல் 1.45 மணிக்கே சென்னை வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக, விமானம் தாமதமாக சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை, மே 26:
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று 2வது நாளாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்கான கட்டமைப்பு பணிகளை பார்வையிட முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் கோவை வந்தார்.
மாநாட்டு குழுக்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாலையில், மாநாட்டு அலங்கார ஊர்தி அமைக்கும் பணி, ஊர்வலம் செல்லும் பாதை, சிறப்பு விருந்தினருக்கான மேடைகள், கொடிசியா வளாகத்தில் கண்காட்சி அரங்கு, மாநாட்டு பந்தல் போன்றவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வர் அறிவுறுத்தலின்படி, அன்று மாலையே கொடிசியா வளாகத்துக்கு கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பந்தல், கண்காட்சி அரங்கு அமைக்கும் பணிகளில் அவர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் மாநாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கருணாநிதி ஆலோசித்தார். மாநாட்டுக்கு வரும் பொது மக்களுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள், பார்க்கிங் வசதி, விருந்தினர்கள் செல்லும் வழிகள், அவர்களை தங்கும் இடங்களுக்கு அழைத்து செல்ல வாகனங்கள் போன்றவை குறித்து போக்குவரத்து ஏற்பாட்டு குழுவினரிடம் முதல்வர் விவாதித்தார்.
காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்த ஆலோசனை கூட்டத்தில், வரவேற்புக்குழு துணைத்தலைவர் துரைமுருகன், பொது அரங்க நிகழ்ச்சி அமைப்புக் குழு தலைவர் பொன்முடி, போக்குவரத்து ஏற்பாடுக்குழு தலைவர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மாநாட்டு தனிஅதிகாரி அலாவுதீன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராட்டு:
கோவை அண்ணா பல்கலை. தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தலைவர் சுத்தானந்தன் முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து, பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.