செம்மொழி மாநாடு கொடிசியா வளாகத்தில் 30 செல்போன் டவர்கள்

கோவை, மே 29:
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக 30 செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
கோவையில் தனியார் மற்றும் பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு துறையின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய அரசின் தொலை தொடர்பு துறை (டெலிகாம் கமிஷன்) தொழில்நுட்ப உறுப்பினர் சந்திர பிரகாஷ், தமிழக தொலை தொடர்பு துறை (டெர்ம்) துணை பொது இயக்குநர் ரகுநந்தன் மற்றும் 10 தனியார் செல்போன் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக, பீளமேடு கொடிசியா வளாகத்தில் செல்போன் டவர் அமைத்தல், பராமரித்தல் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பி.எஸ்.என்.எல். சார்பில் பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சந்திரபிரகாஷ், ரகுநந்தன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது;
செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட செல்போன் டவர் அமைக்கும் பணி நடக்கிறது. அதிகளவில் நடமாடும் செல்போன் டவர்கள் அமைக்கப்படும். வாகனங்களில் செல்போன் டவர் அமைத்து, கொடிசியா வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் சார்பில், 5 அரங்குகளில் பைபர் ஆப்டிக்கல் கேபிள் வசதி அமைக்கும் பணி நடக்கிறது. இதில் அகன்ற அலைவரிசை இணைப்பு வழங்கப்படும். இதற்காக சுமார் 1 கோடி ரூபாய் செலவிடப்படும். மாநாடு நிகழ்வில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் மிகுதியாக உள்ள இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. கூடுதல் டவர் அமைப்பதன் மூலம் சிக்னல், இணைப்பு தடைபடுவது போன்ற பிரச்னை ஏற்படாது. சில செல்போன் நிறுவனங்கள் கூட்டாகவும் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் பணி முடிந்து விடும். மாநாடு வளாகம் முழுவதும் கம்பியில்லா இணைய தள வசதி செய்யப்படுகிறது. மாநாட்டில் பங்கேற்பவர்கள், மீடியா, பத்திரிகையாளர்கள் கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்களை எளிதாக தடையின்றி இயக்க முடியும் என்றனர்.
Source : Dinakaran
Advertisements

கோவையில் செம்மொழி மாநாடு ஏற்பாடு முதல்வர் கருணாநிதி 2வது நாளாக ஆய்வு ‘பணிகள் முழு திருப்தி’

கோவையில் செம்மொழி மாநாடு ஏற்பாடு முதல்வர் கருணாநிதி 2வது நாளாக ஆய்வு ‘பணிகள் முழு திருப்தி’

கோவையில் செம்மொழி மாநாடு ஏற்பாடு முதல்வர் கருணாநிதி 2வது நாளாக ஆய்வு ‘பணிகள் முழு திருப்தி’

சென்னை :
முதல்வர் நேற்று மாலை 4.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதிக்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், முதல்வர் கருணாநிதி, நிருபர்களிடம் கூறுகையில், ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கோவை சென்றிருந்தேன். பணிகள் மிக சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கின்றன. மாநாட்டு ஆயத்தப் பணிகள் முழு மனதிருப்தி அளித்துள்ளது. ஆனாலும், மாநாடு சிறப்படைய வேண்டும் என்பதற்காக, மேலும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவிட்டு வந்துள்ளேன்’ என்றார்.
முதல்வர் கருணாநிதி வந்த விமானம் பிற்பகல் 1.45 மணிக்கே சென்னை வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக, விமானம் தாமதமாக சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை, மே 26:
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று 2வது நாளாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்கான கட்டமைப்பு பணிகளை பார்வையிட முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் கோவை வந்தார்.
மாநாட்டு குழுக்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாலையில், மாநாட்டு அலங்கார ஊர்தி அமைக்கும் பணி, ஊர்வலம் செல்லும் பாதை, சிறப்பு விருந்தினருக்கான மேடைகள், கொடிசியா வளாகத்தில் கண்காட்சி அரங்கு, மாநாட்டு பந்தல் போன்றவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல்வர் அறிவுறுத்தலின்படி, அன்று மாலையே கொடிசியா வளாகத்துக்கு கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பந்தல், கண்காட்சி அரங்கு அமைக்கும் பணிகளில் அவர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் மாநாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கருணாநிதி ஆலோசித்தார். மாநாட்டுக்கு வரும் பொது மக்களுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகள், பார்க்கிங் வசதி, விருந்தினர்கள் செல்லும் வழிகள், அவர்களை தங்கும் இடங்களுக்கு அழைத்து செல்ல வாகனங்கள் போன்றவை குறித்து போக்குவரத்து ஏற்பாட்டு குழுவினரிடம் முதல்வர் விவாதித்தார்.
காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்த ஆலோசனை கூட்டத்தில், வரவேற்புக்குழு துணைத்தலைவர் துரைமுருகன், பொது அரங்க நிகழ்ச்சி அமைப்புக் குழு தலைவர் பொன்முடி, போக்குவரத்து ஏற்பாடுக்குழு தலைவர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மாநாட்டு தனிஅதிகாரி அலாவுதீன், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராட்டு:
கோவை அண்ணா பல்கலை. தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தலைவர் சுத்தானந்தன் முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து, பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
Source : Dinakaran

மாநாட்டு பேரணியில் இடம்பெறும் ஊர்திகள் அமைக்கும் பணி முதல்வர் நேரில் ஆய்வு

கோவை, மே 25:
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும் கொடிசியா வளாகம் மற்றும் மாநாட்டு ஊர்வலத்தில் இடம் பெறும் அலங்கார ஊர்திகள் தயாரிப்பு பணியை முதல்வர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார்.
கோவையில் ஜூன் மாதம் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாட்டு பேரணியில் தமிழர் மற்றும் தமிழ் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் 40 அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது.
இவற்றை தயாரிக்கும் பணியில் தோட்டாத்தரணி, ஓவியர் டிராஸ்கி மருது உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் முகாமிட்டு இரவு, பகலாக அலங்கார ஊர்திகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை இந்த பணிகளை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார். தலைமை செயலர் ஸ்ரீபதி, கலெக்டர் உமாநாத், ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோர் அலங்கார ஊர்திகள் அமைக்கும் வடிவங்கள் குறித்து விளக்கினர். அப்போது ஓவியர் டிராஸ்கி மருதுவிடம், எதிர்கால தலைமுறையினரும் தமிழ் கலாச்சாரத்தை உணர்ந்து கொள்ளும் வகையில் ஓவியங்கள் இருக்க வேண்டும், மாநாட்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அலங்கார ரதங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
ஊர்வலம் செல்லும் அவிநாசி பாதையில் சிறப்பு விருந்தினர்களுக்காக மேடைகள் அமைக்கப்படும் இடங்களை முதல்வர் பார்வையிட்டார். பின்னர், கண்காட்சி அரங்கு அமைக்கும் பணி, மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை முதல்வர் பார்வையிட்டார்.
தமிழ் புலவர்கள் பெயரில் ஆய்வரங்க அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் ஒரு அரங்குக்கு அவ்வையார் அரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவ்வையார் என்ற பெயரை சுருக்கி, அவ்வை என மாற்றம் செய்து அரங்கை அமைக்கவேண்டும் என துணைவேந்தர் ராஜேந்திரனுக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்க வசதியாக 300 பிளாஸ்மா டி.வி.க்கள் வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கலெக்டர் உமாநாத் ஆகியோர் கூறினர். காற்று, மழைக்கு பாதிக்காத வகையில் பந்தல் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.

கோவையில் செம்மொழி மாநாடு பணிகள் 21 குழு தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை

செம்மொழி மாநாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று கோவை வந்தார். அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 21 குழு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அருகில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் ஸ்ரீபதி, மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், கலெக்டர் உமாநாத்.

செம்மொழி மாநாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று கோவை வந்தார். அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 21 குழு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அருகில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் ஸ்ரீபதி, மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், கலெக்டர் உமாநாத்.

கோவை, மே 25:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான பல்வேறு குழுக்களின் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார். மாநாட்டு பணிகளை விரைவில் முடிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர் கருணாநிதி நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.
மாநாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின், மாநாட்டு குழுக்களின் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் உமாநாத் விளக்கினார். ஒவ்வொரு குழு சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து அந்தந்த குழு தலைவர்கள் தெரிவித்தனர். முதல்வர், துணை முதல்வர் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
சாலை மேம்பாடு, மின் விளக்குகள் அமைத்தல், குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், 4.4 லட்சம் சதுர அடியில் அமைக்கப்படும் மாநாட்டு பந்தல், கண்காட்சிக்கூடம், ஆய்வரங்க வளாகங்கள், தங்கும் வசதி உள்ளிட்ட பணிகள் குறித்தும் முதல்வரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இறுதியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், ‘மாநாட்டையொட்டி ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து, பல்வேறு பணிகளுக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு வசதிகள் செய்வதில் தொய்வு இருக்கக் கூடாது.
மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இன்னும் விரைவாக பணிகளை செய்து முடிக்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம்(வரவேற்பு குழு), துரைமுருகன்(துணைத்தலைவர் வரவேற்பு குழு), பொன்முடி(பொது அரங்க நிகழ்ச்சி அமைப்பு குழு), நேரு(ஊர்வலக்குழு), பன்னீர்செல்வம்(சுகாதாரக்குழு), பொங்கலூர் பழனிச்சாமி(தங்குமிட ஏற்பாடு குழு), சுரேஷ்ராஜன்(கலை நிகழ்ச்சி மற்றும் சுற்றுலாக்குழு), பரிதிஇளம்வழுதி(மக்கள் தொடர்பு), வேலு(விருந்தோம்பல் குழு), தங்கம் தென்னரசு(கண்காட்சி அமைப்பு குழு), வெள்ளகோவில் சாமிநாதன்(போக்குவரத்து ஏற்பாடு குழு), தலைமை செயலர் ஸ்ரீபதி, மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன், உள்துறை செயலர் ஞானதேசிகன், டிஜிபி லத்திகாசரண், மாநாட்டு ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளர் கனிமொழி, தமிழ் இணைய மாநாட்டுக்குழு தலைவர் அனந்தகிருஷ்ணன், வா.செ.குழந்தைசாமி, மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, மண்டல ஐ.ஜி சிவனாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாடு நடைபெறவுள்ள கொடிசியா அரங்கில் பணிகள்

கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நடைபெறவுள்ள கொடிசியா அரங்கில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இப்பணிகளை முதல்வர் கருணாநிதி நேற்று ஆய்வு செய்தார்.

கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நடைபெறவுள்ள கொடிசியா அரங்கில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இப்பணிகளை முதல்வர் கருணாநிதி நேற்று ஆய்வு செய்தார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பணிகளை விரைவுபடுத்த துணை முதல்வர் உத்தரவு

கோவை, மே 24:
கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் கருணாநிதி, இன்று கோவை வருகிறார். இதற்கிடையே, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்து மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
கோவையில் நேற்று காலையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, வெள்ளகோவில் சாமிநாதன், மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன்மார்டி, நகராட்சி நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் புதிய பஸ் ஸ்டாண்ட், கவுண்டம்பாளையம்&வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், ரூ.60 கோடியில் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் புதைத்தல், செம்மொழி பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தாமதமாகும் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார்.
பின்னர், மாநாட்டு பேரணியில் இடம் பெறவுள்ள அலங்கார ஊர்திகள் தயாராகும் வஉசி பூங்காவுக்கு சென்ற ஸ்டாலினிடம், ஊர்திகள் குறித்து கலெக்டர் உமாநாத் விளக்கினார். இதைத் தொடர்ந்து, அவிநாசி ரோட்டில் ஊர்வலம் நடக்கும் பாதையில் முக்கிய விருந்தினர்களுக்கான மேடை அமைக்கப்படும் இடங்களை ஸ்டாலின் பார்வையிட்டார். அவிநாசி சாலையில் ரயில்வே மேம்பாலப் பணி உள்பட பல்வேறு பணிகளையும் ஸ்டாலின் நேற்றே ஆய்வு செய்தார்.
மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் 4 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் திருப்தி தெரிவித்தார். அனைத்து கட்டமைப்பு பணிகளும் விரைவில் முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

செம்மொழி மாநாட்டில் பங்கேற்போருக்கு கோவை,திருப்பூர் ஓட்டல்களில் 5,000 அறைகள் முன்பதிவு

கோவை, மே 20:
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரும் தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் தங்குவதற்காக கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஓட்டல்களில் 5 ஆயிரம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கோவை கலெக்டர் உமாநாத் கூறினார்.
கோவையில் ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்கவுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பார்வையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தங்குவதற்கு ஓட்டல் அறைகளை தயார் நிலையில் வைப்பதற்காக ஓட்டல் உரிமையாளர்களுடன் கலெக்டர் உமாநாத் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது:
கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூரில் உள்ள ஓட்டல்களில் 5 ஆயிரம் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 95 சதவீத அறைகளை ஒதுக்கி விட்டு, 5 சதவீத அறைகளை காலியாக வைத்திருக்க வேண்டும். தேவைக்கேற்ப அவை பயன்படுத்தப்படும். அழைப்பாளர்கள், அவர்களின் பாதுகாவலர்கள் பற்றி இணைய தளத்தில் வெளியிடப்படும். தங்குபவர்கள் பற்றி போட்டோவுடன் விவரம் தெரிவிக்கப்படும். அழைப்பாளர்களுக்கு காலை மற்றும் இரவு உணவை அந்தந்த ஓட்டல்களே ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். மதிய உணவு கொடிசியா வளாகத்தில் வழங்கப்படும். நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருப்பவர்கள் அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்தினால், அந்த செலவை அரசு ஏற்காது. அழைப்பாளர்களை அழைத்து செல்ல சொகுசு ஏசி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டலுக்கு அழைப்பாளர்கள் வந்தவுடன், உடனடியாக இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓட்டலுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அழைப்பாளர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதை அவர்கள் தீர்த்து வைப்பார்கள்.
இவ்வாறு கலெக்டர் உமாநாத் கூறினார். கூட்டத்தில் மாநாட்டு சிறப்பு அலுவலர் பிரபாகரன் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்ட னர்.
கலெக்டர் தகவல்
Source : Dinakaran